Sunday, November 14, 2010

2ம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டும் - முகமட் அலி அகா

கொல்ல வந்தவனுக்கும் இறக்கம்...

30 வருடங்களுக்கு முன் மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துப்பாக்கியால் திருத்தந்தையைச் சுட்டுக் காயப்படுத்திய துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா( தற்போது 52 வயது) துருக்கிய சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



1981ம் ஆண்டு வத்திக்கான் தூய பேதுருவானவர் சதுக்கத்தில் திருவழிபாட்டிற்காக பிரசன்னமாகியிருந்த மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா துப்பாக்கியால்; சுட்டுக் காயப்படுத்தினான்.

விசாரணைக்குப்பின் இத்தாலிய நீதி மன்றம் முகமட் அலி அகாவிற்கு ஆயுட் காலச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆனால் திருத்தந்தை ஆசா. இரண்டாம் அருள் சின்னப்பர் 1983ம் ஆண்டு ; சிறைச்சாலைக்குச் சென்று முகமட் அலி அகாவைச் சந்தித்து அவருக்கு மன்னிப்பு வழங்கினார். 19 வருட இத்தாலிய சிறை வாழ்வின் பின் 2000ம் ஆண்டு திருத் தந்தையின் அனுசரணையோடு இத்தாலியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலை பெற்றுத் துருக்கி சென்றபோது அந் நாட்டில்1979ம் துருக்கிய பத்திரிகையாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இவர் மீண்டும் அங்கு சிறைத் தண்டனை பெற்றார்.

முகமட் அலி அகா, தான் விடுதலையாவதற்கு முன்னர் தனது வழக்கறிஞர் மூலமாக பல எழுத்து மூலமான அறிக்கைகளை விடுத்துள்ளார். அவற்றுள் மிக முக்கியமாக தான் வன்முறையையும், பயங்கர வாதத்தையும் வெறுப்பதாகவும்: ஒசாமா பின்லேடன், அடோல்வ் ஹிட்லா் ஆகியோர் சமயங்களினதும், உலகத்தினதும் பொது எதிரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டுமென்பது தனது மிகப்பெரும் விருப்பங்களுள் ஒன்றாக இருக்கின்றது எனவும் தான் வத்திக்கானுக்குச் செல்லவேண்டு மெனவும் அவர் கேட்டுள்ளார். இது பற்றி இத்தாலிய தொலைக் காட்சிக்குக் கருத்துத் தெரி வித்த திருப்பீடத்தின் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆலோசகர் குழுவின் தலைவர் கர்தினால் பீற்றர் தூர்சன்: முகமட் அலி அகா திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் சென்று செபிப்பதற்கு எது விதமான தடையோ, முரண்பாடுகளோ இல்லையென்றும் ஆனால் வத்திக்கானுக்கு வரும்போது பெரும் எண்ணிக்கையான பாதுகாப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும் கூறினார்.

No comments:

Post a Comment